search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து தீவிரவாதம்"

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று நான் சொன்னது சரித்திர உண்மை என்று கமல் மீண்டும் கூறி உள்ளதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தபோது, முஸ்லிம்கள் அதிகம் வாழும் பள்ளப்பட்டி என்ற ஊரில் பேசுகையில் இந்து தீவிரவாதம் என்பது பற்றி குறிப்பிட்டு பேசினார்.

    அவர் கூறுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அவர் காந்தியை கொலை செய்ததற்கு நியாயம் கேட்டு வந்துள்ளேன்” என்றார்.

    நடிகர் கமல்ஹாசனின் பேச்சு இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது. இதையொட்டி பல இடங்களில் கமல்ஹாசன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட ஊர்களில் கமல்ஹாசன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மன்னார்குடி ஜீயர் உள்பட ஏராளமானவர்கள் கமல்ஹாசனுக்கு கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இதற்கிடையே இந்து தீவிரவாதி என்று கூறியதால் கமல்ஹாசனால் அடுத்த 2 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    தாக்குதல் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவர் 2 நாட்கள் பிரசாரத்தை ரத்து செய்தார்.

    இந்த நிலையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்ததைத் தொடர்ந்து நேற்று கமல்ஹாசன் பிரசாரத்தை தொடர முடிவு செய்தார். அதன்படி நேற்று அவர் திருப்பரங்குன்றம் தொகுதியில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.



    அப்போது அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று நான் சொன்னது சரித்திர உண்மை” என்று உறுதிபட கூறினார். கமல்ஹாசன் மீண்டும் இந்து தீவிரவாதி பற்றி பேசியதால் அவருக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    கமல்ஹாசன் நாக்கை மக்கள் அறுப்பார்கள் என்று முதல் ஆளாக எச்சரித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    சட்டை கலையாமல் கமல்ஹாசனை அரசியலில் இருந்து தமிழக மக்கள் அப்புறப்படுத்துவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) மாலை கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்வது உறுதியாகியுள்ளது. பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் அதிகாரி அனுமதி வழங்கி விட்டதாக கரூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்தனர்.

    இன்று மாலை 5 மணிக்கு தென்னிலையில் திறந்தவேன் மூலம் கமல்ஹாசன் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் தொப்பம்பட்டி, நொய்யல், தளவாபாளையம் ஆகிய இடங்களில் வேட்பாளர் மோகன் ராஜீக்கு ஆதரவு கேட்டு தொடர்ந்து பேசுகிறார்.

    பின்னர் வேலாயுதம்பாளையம் மலை வீதியில் இரவு 8.15 மணியளவில் நடக்கிற பொதுக்கூட்டத்திலும் கமல்ஹாசன் பங்கேற்று பேசுகிறார். இதற்கிடையே இந்து முன்னணியினர் அரவக்குறிச்சியில் கமல்ஹாசனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியுள்ளனர். அனுமதி கிடைக்காவிட்டாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என கூறியுள்ளனர்.

    கமல்ஹாசன் பிரசாரத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அரவக்குறிச்சி தொகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    ×